ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நீடிப்பு

கீவ், ஜூன் 7-
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் வழங்கினால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார். நாசகார ஏவுகணைகள் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 100 நாட்களை கடந்து தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் உக்ரைன் தொடர்ந்து நிலைகுலைந்து வருகிறது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகளை அடுத்தடுத்து இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, தற்போது தலைநகர் கீவ் நகரை மீண்டும் இலக்காக்கி இருக்கிறது. இதனால் போர் மீண்டும் வேகமெடுத்து உள்ளது. அங்கு நேற்று முன்தினம் வான்வழி தாக்குதலை நடத்தியது. நாசகார ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசிய ரஷியா, இதன் மூலம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. ரெயில் தொழிற்சாலை குறிப்பாக உக்ரைனுக்கு வெளிநாடுகள் வழங்கிய பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியா தெரிவித்து உள்ளது.

இதில் உயிரிழப்புகள் நடந்திருப்பதாக உக்ரைனும் ஒப்புக்கொண்டு உள்ளது. அந்தவகையில் ரஷியா ஏவிய ஏவுகணை ஒன்று கீவில் உள்ள ரெயில் என்ஜின் பழுதுபார்க்கும் தொழிற்சாலையை பதம் பார்த்ததாகவும், மற்ற ஏவுகணைகள் டிரஸ்கிவ்கா நகரில் கட்டிடங்களை சேதப்படுத்தியதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரம் ரஷிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போரில் பழுதான உக்ரைன் தளவாடங்களை பழுதுநீக்கும் தொழிற்சாலைகளையும் இந்த தாக்குதலில் இலக்காக கொண்டிருந்ததாக தெரிவித்தார்.