ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் விரைவில் விடுவிப்பு

மாஸ்கோ: ஜூலை 9: பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசி இருந்தார். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவப் பணியில் இருந்து விடுவிக்கப்படும் இந்தியர்களை மீண்டும் தாயகம் திரும்ப தேவையான அனைத்து நடைமுறைகளையும் ரஷ்யா உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் உக்ரைன் உடனான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறையின் தரவுகளின்படி சுமார் 30 முதல் 40 இந்தியர்கள் வரையில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தெரிகிறது. அவர்கள் நாடு திரும்ப விரும்பினாலும் அது நடக்கவில்லை என்ற தகவல் இதற்கு முன்பு வெளியானது. ஏற்கெனவே ரஷ்ய ராணுவ பணியில் இருந்த இந்தியர்கள் 10 பேர் நாடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கேள்வி? – முன்னதாக, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்ப இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி உறுதி செய்வாரா என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சி எழுப்பி இருந்தது. “இரண்டு இந்தியர்கள் போரில் உயிரிழந்ததாக தெரிகிறது. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை காரணமாக நம் இளைஞர்களுக்கு இந்த நிலை வந்துள்ளது. வெளிநாட்டு வேலை எனச் சொல்லி ராணுவ பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு திரும்புவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அதிர்ச்சித் தகவல் வெளியானது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதவியாளர்கள்’ என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்ய தரப்பில் போரிட்டு வரும் இந்தியர்கள் உத்தரபிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆயுதம் மற்றும் வெடிமருந்து பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சியை ரஷ்ய ராணுவம் தங்களுக்கு வழங்கி, உக்ரைன் நாட்டை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியான Rostov-on-Don பகுதியில் உள்ள முகாமில் கடந்த ஜனவரி மாதம் முதல் பணியமர்த்தி உள்ளதாக பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர். 2023 நவம்பரில் ரஷ்யா சென்ற இந்தியர்கள் ராணுவ உதவியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாதம் ரூ.1.95 லட்சம் ஊதியம் மற்றும் ரூ.50,000 போனஸ் என அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றில் வெளியான வேலைவாய்ப்பு தகவலை நம்பி அங்கு சென்று இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சிலர் தப்பியும் உள்ளனர்.இந்திய – ரஷ்ய உச்சி மாநாடு: ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் டெல்லியில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய, ரஷ்ய உச்சி மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்றும், இன்றும் நடைபெறுகிறது. கடந்த 2019-ம் ஆண்டுக்கு தற்போது தான் பிறகு பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.