ராகுலின் வயநாடு தொகுதியை கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்

ஹைதராபாத்:பிப்.7-
வரும் மக்களவை தேர்தலில், ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் விரும்புவதால், ராகுல் காந்தியை வேறு தொகுதியில் போட்டியிட வேண்டுகோள் விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில், 2வது இடம் பிடித்தஇந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 4 லட்சம் ஒட்டுகள் அதிகம் பெற்று ராகுல் வெற்றி பெற்றார். கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும், இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் 2-ம் இடம் பிடித்தது.
தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், கேரளாவில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும்முடிவடையவில்லை. ஆனால் வயநாடு தொகுதியில் போட்டியிடஇந்திய கம்யூனிஸ்ட் விரும்புவதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் முடிவடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவிடம் கேட்டபோது, ‘‘வயநாடு தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவேண்டும் என்பது பற்றி செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கேரளாவின் இடதுசாரிஜனநாய முன்னணிக்குள் (எல்டிஎப்) செய்து கொண்ட தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களை பெற்றுள்ளது. அதில் ஒன்று வயநாடு தொகுதி’’ என்றார்.
ராகுல் காந்தி வேறு தொகுதியை தேர்வு செய்தால், வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகளிர் அணியின் பொதுச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவின் மனைவி ஆனி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில்டி.ராஜா, தேசிய செயலாளர்கள் நாராயணா, ராமகிருஷ்ணா பாண்டா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முதலில் கேரளாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 உறுப்பினர் குழு, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வயநாடு தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்கும் சாத்தியங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும். என கூறப்படுகிறது.