ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பா பயணம்

புதுடெல்லி, ஆக. 25- ங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இந்தியா ஒற்றுமை யாத்திரையை சில மாதங்களுக்கு முன்பு நடத்தி முடித்தார். அடுத்தகட்டமாக அவர் நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் கடந்த சில நாட்களாக லடாக் பகுதியில் பயணம் மேற்கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடி விட்டு டெல்லி திரும்பினார். முன்னதாக, லடாக் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்வார் எனத் தகவல் பரவியது.
இந்நிலையில் ராகுல்காந்தியின் ஐரோப்பிய பயணம் தற்போது உறுதியாகி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந் தேதி டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.
ராகுல், 5 நாள் பயணமாக பெல்ஜியம், பிரான்ஸ், நார்வே ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். பயணத்தின் போது அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் அவர் சந்தித்துப் பேச உள்ளார். தற்போதைய பயணத்தின் படி செப்டம்பர் 7-ந் தேதி யன்று பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் சந்திக்க உள்ளார். இதையடுத்து, பாரீஸ் பல்கலைக்கழகத்தில் அவர் 8-ந் தேதி உரையாற்றுகிறார். 9-ந் தேதியன்று பிரான்ஸ் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார். பயணத்தின் இறுதி நாளான 10-ந் தேதி நார்வே நாட்டின் ஆஸ்லோ நகருக்கு அவர் செல்கிறார்.
இதனிடையே பல்வேறு செய்தியாளர் சந்திப்பிலும் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் 9,10 ஆகிய தேதிகளில் ராகுல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது அரசியல் களத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் இந்திய ஜனநாயகம் குறித்து விமர்சித்து ராகுல் பேசியதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.