ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு

தானே, ஜன. 10- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2014-ம் ஆண்டு தானே பிவண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது ஆர்.எஸ்.எஸ். தான் மகாத்மா காந்தி கொலைக்கு பின்னணியில் இருப்பதாக கூறினார். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். உள்ளூர் நிர்வாகியான ராஜேஷ் குண்டே என்பவர் பிவண்டி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு எல்.சி. வாதிக்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதுபற்றி ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் நாராயண் ஐயர் கூறுகையில், “ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்கும் விவகாரம் குறித்து பிப்ரவரி 4-ந் தேதி கோர்ட்டில் வாதிக்கப்படும்” என்றார்.