ராகுல் காந்திக்கு பினராய் விஜயன் கேள்வி

திருவனந்தபுரம், ஏப். 2- ராகுல் காந்தி ஏன் மீண்டும் கேரளாவில் போட்டியிடுகிறார்? அவர் பாஜகவை எதிர்க்கிறாரா? இல்லை இந்தியா’ கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்கிறாரா? என சரமாரியான கேள்விகளை எழுப்பி முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸை விளாசியுள்ளார். கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்க்கட்சிகளின் இந்தியா’ கூட்டணியில் உள்ளது. இதனால் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு பதில் வேறு இடத்தில் போட்டியிட வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் வலியுறுத்தினர். அதாவது கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நிலையில் வேறு மாநிலத்தில் ராகுல் காந்தி களமிறங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் செவிசாய்க்கவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடுகிறார். முன்னதாக இந்த தொகுதியில் இந்திய கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜாவின் மனைவி அன்னி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் காங்கிரஸ் சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி களமிறங்கி உள்ளார். இதையடுத்து தற்போது கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிற. அதாவது கம்யூனிஸ்ட் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி தனித்தனியே போட்டியிடுகின்றன. மொத்தம் 20 தொகுதிகள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி பினராயி விஜயன் கூறியதாவது: ராகுல் காந்தி மீண்டும் கேரளாவில் போட்டியிடுவதை பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் ஏன் பாஜகவை எதிர்க்காமல் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்கிறார் என கேள்வி கேட்கின்றனர். இந்தியா’ கூட்டணியில் ராகுல் காந்தி முக்கியமான தலைவராக இருந்து கொண்டு கூட்டணி கட்சியின் வேட்பாளருக்கு எதிராகவே களமிறங்கி உள்ளார். கேரளாவில் யாரை எதிர்த்துப் போராடுகிறார் ராகுல் காந்தி? கேரளாவில் (பாஜக வேட்பாளர்) கே.சுரேந்திரனை எதிர்த்து போட்டியிடுகிறார் என்று சொல்ல முடியுமா? பாஜகவை எதிர்த்து போராடுவதற்காக கேரளா வந்ததாகச் சொல்ல முடியுமா? கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிர்த்து போட்டியிடவே அவர் இங்கு வருகிறார். ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்து அன்னி ராஜாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். மணிப்பூர் வன்முறையின் போது பாஜக அரசின் தவறை கடுமையாக விமர்சித்ததற்காக தேச விரோதி என்று அழைக்கப்பட்டார். அவரது உண்மை கண்டறியும் அமைப்புதான் கிறிஸ்தவ மக்களின் கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதில் ராகுல் காந்தியின் பங்கு என்ன? அது குறித்து அவர் எதுவும் கூற முடியுமா? மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது, அன்னி ராஜா அனைத்து இடங்களிலும் இருந்தார். ஆனால், காங்கிரஸின் மிக முக்கிய தலைவர் ராகுல் காந்தியை பார்த்தோமா?. யார் எங்கிருந்து போட்டியிடுவது என்பதை அவர்களால் முடிவு செய்ய முடியும். ஆனால் காங்கிரஸின் இந்த பொருத்தமற்ற செயல் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது’’ என்றார். இந்த பேட்டியின் மூலம் பாஜகவை பார்த்து ராகுல் காந்தி பயப்படுகிறாரா? என்பதை மறைமுகமாக பினராயி விஜயன் கேட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியை தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளது.