ராகுல் காந்திக்கு மத்திய சட்ட மந்திரி எச்சரிக்கை

புதுடெல்லி, மார்ச் 17-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அனைத்து அமைப்புகளையும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். அவர் இந்தியாவை அவமானப்படுத்தி விட்டதாக பாராளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜனதா அமளியில் ஈடுபட்டு வருகிறது. அவர் கூறியதாவது:-ராகுல்காந்தி என்ன பேசினாலும், அது அவரது சொந்த கட்சிக்கே தீங்கு விளைவிக்கும். அவர் தனது கட்சியை அழித்துக் கொள்ளட்டும். அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க முயன்றால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவரை மன்னிக்க மாட்டோம். நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை. நாட்டை இழிவுபடுத்துவது அவ்வளவு கடுமையானது இல்லை என்று காங்கிரஸ் கருதினால், பாராளுமன்றத்தில் ஒருதரப்பு மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு அக்கட்சிக்கு தகுதி இல்லை. காங்கிரசை நாடு நிராகரித்ததற்காக, நாட்டை பற்றி மோசமாக பேச காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக அர்த்தம் இல்லை.
அரசியல் சட்டத்தையும், நீதித்துறையும் இழிவுபடுத்துகிறார். அவர் எத்தகையவர் என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர் உண்மை பேசுவதாக நினைப்பார்கள். காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க லண்டனுக்கு சென்று தரையை சுத்தம் செய்யுமா? பிரதமர் மோடி, வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தியதாக கூறுகிறார்கள்.
அவர் முந்தைய அரசின் செயல்களை பற்றி மட்டுமே பேசினார். மோடி, தானாக பிரதமர் ஆகிவிடவில்லை. 140 கோடி மக்களின் ஆசியுடன் பிரதமர் ஆனார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் பங்கை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.