ராகுல் காந்தியிடம் இன்றும் விசாரணை

புதுடெல்லி,ஜூன்.15
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைகளின் பங்குகளை மாற்றியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பியிடம் மீண்டும் இன்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர்.
காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டது. இதை அடுத்து அவர் வீட்டுக்குச் சென்றார். மாலை 4:30 மணியளவில் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரானார்.
நேற்று விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டுச் சென்றார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. இது பழிவாங்கும் நடவடிக்கை என கூறி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்பர் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கூடினார்கள். அந்த பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதால் அங்கு, கட்சி அலுவலகத்துக்கு வர அனுமதி பெற்றவர்களை தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையும் மீறி சில எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையில் போலீசார் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.