ராகுல் தினமும் 7 மணி நேரம் பாத யாத்திரை

நாகர்கோவில்,செப். 2- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி 3750 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும் ராகுல் காந்தி 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் சென்றடைகிறார். கன்னியாகுமரியில் 7-ந்தேதி தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலமாக 7-ந் தேதி காலை சென்னை வருகிறார். காலை 11 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ராகுல் காந்தி மதியம் 2 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகிறார். அவருடன் 2 மாநில முதல்-அமைச்சர்களும் வருகிறார்கள். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அங்கிருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை தனிப்படகில் சென்று ராகுல் காந்தி பார்வையிடுகிறார். பின்னர் காந்தி மண்டபத்தை ராகுல் காந்தி பார்வையிடுகிறார். இதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் பாதயாத்திரையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் காமராஜர் மண்டபத்திற்கு செல்லும் ராகுல் காந்தி அந்த பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்குகிறது. இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றுகிறார். இதை தொடர்ந்து அங்கிருந்து தனது பாத யாத்திரையை தொடங்குகிறார்.

முதல் நாள் 3½ கிலோ மீட்டர் தூரம் அவர் பாத யாத்திரையை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியுடன் டெல்லியில் இருந்து 100 நிர்வாகிகளும் தமிழகத்தில் இருந்து 300 நிர்வாகிகளும் என 400 பேர் பாதயாத்திரை செல்ல உள்ளனர். இவர்கள் தினமும் ராகுல் காந்தி பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். இது தவிர அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாத யாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் பாத யாத்திரையை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல் காந்தி நிறைவு செய்கிறார். அன்று இரவு அங்கு தங்குகிறார். தினமும் காலை 4 மணி நேரமும், மாலை 3 மணி நேரமும் என 7 மணி நேரம் பாத யாத்திரை செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.

https://www.maalaimalar.com/news/district/tamil-news-rahul-gandhi-walks-for-7-hours-every-day-507137
https://www.maalaimalar.com/news/district/tamil-news-rahul-gandhi-walks-for-7-hours-every-day-507137
https://www.maalaimalar.com/news/district/tamil-news-rahul-gandhi-walks-for-7-hours-every-day-507137