ராகுல் பங்கேற்கும் கோவைமாநாட்டிற்கு பிரமாண்ட ஏற்பாடு

கோவை: ஏப். 5 : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். தமிழ்நாட்டில் நெருங்கும் மக்களவைத் தேர்தல் தீவிர பரப்புரையில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் வரும் 12ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின்-ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 22ம் தேதி முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 22ம் தேதி திருச்சியில் தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றி வருகிறார். அவரின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தான் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெறும் என்று மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
இதனால், திமுக கூட்டணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பிரசாரமும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர், விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அவர் சென்னையில் வருகிற 17ம் தேதி பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.