ராகுல் பறக்கும் முத்தம் – சபாநாயகரிடம் புகார்

புதுடெல்லி,ஆக.9-
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, எதிர்வரிசையில் இருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தவறாக நடந்து கொண்டதாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியதை அடுத்து, அவருக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறினார். அப்போது அவர் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்தபடி புறப்பட்டார்.இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுத்துபூர்வ புகார் அளித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாஜக பெண் எம்.பி.க்கள், ‘அவையில் ஸ்மிருதி இரானி பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி அநாகரிகமாக நடந்து கொண்டார். அவரது இந்த நடவடிக்கை பெண் எம்.பி.க்களை அவமதித்த செயல் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் கண்ணியத்துக்கும் எதிரானது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே, “அவையில் ஓர் உறுப்பினர் இவ்வாறு நடந்து கொண்டது இதுதான் முதல்முறை. பெண் எம்.பி.க்களைப் பார்த்து அவர் ஃபிளையிங் கிஸ் கொடுத்தார். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” என்று கூறினார்.
இது குறித்து பேசிய மற்றொரு பெண் அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், “அவையை விட்டு வெளியே செல்லும்போது அவர் (ராகுல் காந்தி) ஃபிளையிங் கிஸ் கொடுத்ததை நாங்கள் விரும்பவில்லை. இது நமது கலாசாரம் அல்ல. நாடாளுமன்றத்தில் இதுபோன்று நடப்பதை சகித்துக்கொள்ள முடியாது” என்று குறிப்பிட்டார்.
மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, “ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதைப் போல இதற்கு முன் யாரும் நடந்து கொண்டது கிடையாது. பெண்களின் கண்ணியத்தைக் காக்க சட்டங்களை இயற்றும் ஒரு அவையில், பெண்கள் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக பேசும்போது, “பாரத மாதா இறந்துவிட்டார் என்கிறீர்களா?” என்று மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மேலும், ராகுல் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், “நீங்கள் இந்தியா கிடையாது” என்றார். மக்களவையில் ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி பதிலடி
முன்னதாக, மணிப்பூரை இந்தியாவின் பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை என்றும், மணிப்பூரில் இந்தியாவை பாஜக கொன்றுவிட்டது என்றும் மக்களவையில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.