ராகுல் பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு

புதுடெல்லி, ஜன .12-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை பஞ்சாபை அடைந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைபயணம் நடந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இம்மாதம் 30-ந் தேதி யாத்திரை நிறைவடைகிறது. அதில், ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இந்தநிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பாதயாத்திரை தொடங்கியதில் இருந்தே ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல்காந்தி அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.
அதுபோல், ஸ்ரீநகரில் 30-ந் தேதி நடக்கும் நிறைவு விழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தி நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச்சியை காந்தியின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறோம். சிக்கலான இந்த தருணத்தில் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாதயாத்திரை வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. எனவே, நீங்கள் பங்கேற்றால், யாத்திரையின் நோக்கத்ததுக்கு வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று, நாடு பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கானோரை யாத்திரை இணைக்கிறது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மக்களுடனான நேரடி உரையாடல்தான், யாத்திரையின் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.