ராகுல் முடிவு தெரியாமல் தொண்டர்கள் திணறல்

புதுடெல்லி: செப்டம்பர் . 22 – காங்கிரஸ் தலைவர் தேர்தல் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ள நிலையில், ராகுல் தொடர்ந்து மவுனம் காப்பது கட்சித் தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், அசோக் கெலாட், சசிதரூர் இருவரும் போட்டியிட தயாராகி உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். பின்னர், இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்றார். உடல் நலக்குறைவால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில், கட்சித் தலைமை குறித்து மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர்.
எனவே, கட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும், தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேர்தல் அறிவிப்பு முறைப்படி இன்று வெளியிடப்படுகிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்கும். தேர்தல் முடிவு அடுத்த மாதம் 19ம் தேதி வெளியிடப்படும். மீண்டும் கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க ராகுல் இன்னும் தயாராகாத நிலையில், காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்கு உரியவரான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும், கட்சித் தலைமையை விமர்சித்த ஜி23 தலைவர்களில் ஒருவரான திருவனந்தபுரம் எம்பி சசிதரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின.
சமீபத்தில் டெல்லி சென்ற சசிதரூர், சோனியா காந்தியை சந்தித்தார். இந்நிலையில், நேற்று டெல்லி வந்த அசோக் கெலாட் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘‘கட்சியும், கட்சித் தலைமையும் எனக்கு எல்லாவற்றையும் தந்துள்ளன. நான் கடந்த 40-50 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறேன். என்னை பொறுத்த வரை பதவி முக்கியமில்லை; எனக்கு தந்த பொறுப்பை பூர்த்தி செய்வதே முக்கியம். அந்த வகையில், கட்சியினர் விருப்பப்பட்டால் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். இந்த முடிவு கூட கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எடுத்துள்ளேன்’’ என்றார்.
இதன் மூலம் கெலாட், சசிதரூர் இருவரும் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஆனாலும், கடைசி கட்டமாக ராகுலை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக அசோக் கெலாட் இன்று கேரளா செல்கிறார். அங்கு ராகுலை சந்தித்து பேசிய பிறகு தனது இறுதி முடிவை தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார். தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ராகுல் தொடர்ந்து மவுனம் காப்பதால் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் குழம்பிப் போய் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
யார் வந்தாலும் பொம்மைகளே…
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் தோம் வடக்கன் அளித்த பேட்டியில், ‘‘சசிதரூர், கெலாட் யார் காங்கிரஸ் தலைவர் ஆனாலும் வெறும் தலையாட்டி பொம்மைகளாகத்தான் இருக்கப் போகிறார்கள். அவர்களின் பின்னணியில் இருந்து கட்சியை நடத்தப் போவது என்னவோ ராகுல் காந்தி தான்’’ என்றார்.
ராகுல் வருவாரா?
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ராகுல் கேரளாவில் இருந்து நாளை (23ம் தேதி) டெல்லி வரும் திட்டம் எதுவுமில்லை. அப்படியே அவர் வந்தாலும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வர மாட்டார். அவர் சோனியா காந்தியை பார்ப்பதற்காக வேண்டுமானால் வரலாம்’’ என்றார்.
வேட்புமனு தாக்கல் பணியில் சசிதரூர்
வேட்பு மனு தாக்கல் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அதற்கான பணிகளில் சசிதரூர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் நேற்று டெல்லியில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியை சந்தித்து, வேட்புமனு தாக்கல் தொடர்பான நடைமுறையை கேட்டறிந்தார். இது குறித்து மிஸ்திரி அளித்த பேட்டியில், ‘‘வாக்காளர் பட்டியல், தேர்தல் ஏஜென்ட் மற்றும் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான தனது சந்தேகங்களை சசிதரூர் கேட்டறிந்தார். வரும் 24ம் தேதி வேட்பு மனு விண்ணப்பத்தை பெற்றுக் கொள்வதாக அவர் கூறினார்’’ என்றார்.

  • காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் பொறுப்பேற்க வேண்டுமென புதுச்சேரி, பஞ்சாப், தெலங்கானா மாநில காங்கிரஸ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதுவரை 12க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் அமைப்புகள் ராகுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
  • ‘தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், இதற்காக சோனியா, ராகுலிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை’ என ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.
  • தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் தொடங்கி 30ம் தேதி வரை நடக்க உள்ளது.