
பாட்னா: அக், 23-
ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை சேர்ந்தவர் தசரத் மாஞ்சி. அட்ரி பகுதியில் இருந்து வசிர்கஞ்ச் செல்ல பெரிய மலை தடையாக இருந்தது. 55 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை இருந்தது. இந்நிலையில், தசரத் மாஞ்சி சுத்தி, உளியை மட்டுமே வைத்து மலையை உடைக்க ஆரம்பித்தார். சுமார் 22 ஆண்டுகள் தொடர்ந்து மலையை உடைத்து சாலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் நாடு முழுவதும் தசரத் அறியப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு மாஞ்சி காலமானார்.
பின்னர் தசரத் நினைவு நாள் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது தசரத் மாஞ்சியின் பணியை பெரிதும் பாராட்டினார். அத்துடன், தசரத்தின் மகன் பாகிரத் மாஞ்சிக்கு பிஹார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், பாகிரத் மாஞ்சி கூறும்போது, ‘‘பிஹார் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தேன். ஆனால், எனக்கு சீட் மறுக்கப்பட்டது. இதற்காக டெல்லிக்கு சென்றேன். அங்கு 4 நாட்கள் காத்திருந்து பார்த்தேன். ஆனால், ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. இது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது’’ என்றார்.















