ராஜஸ்தான் தேர்தல் பேரணிபொது கூட்டத்தில் பிரியங்கா

ஜெய்ப்பூர்:அக். 25: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் பேரணி நடைபெறுகிறது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. தற்போது நவம்பர் மாதம் 25ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 3ம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியை மீண்டும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதேபோல முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே இருக்கும் மோதலை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக முயன்று வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த மோதல் போக்கு காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என சொல்லி சொல்லி பார்த்த கட்சி தலைமை, பேச்சை கேட்கவில்லையெனில் சச்சின் பைலட்டை முதல்வராக அறிவித்துவிடுவோம் என்றும் அசோக் கெலாட்டை மிரட்டி பார்த்துவிட்டது. ஆனால், இப்படியெல்லாம் பேசினா மொத்தமாக ராஜினாமா பண்ணிடுவோம் என கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் வார்ன் செய்ய, கட்சி தலைமையோ என்ன செய்வது என புரியாமல் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் பஞ்சாயத்து பெரியதாக வெடிக்க, இரு மாதங்களுக்கு முன்னர் இருவரையும் டெல்லிக்கு அழைத்து பிரச்னையை அப்போதைக்கு பேசி தீர்த்தது கட்சி தலைமை. அதன் பின்னர் இருவரும் பெரியதாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் பைலட் தரப்பு மட்டும், பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே காலத்தில் செய்யப்பட ஊழல்கள் குறித்து விசாரணையை கெலாட் அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை அடிக்கடி வைத்து வருகிறது.
சூழல் இப்படி இருக்கும் நிலையில்தான் இன்று ஜுன்ஜுனு தொகுதியில் பேரணி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 20ம் தேதி நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசியிருந்தார். இதனையடுத்து முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிஸ்ராம் ஓலாவின் சிலையை சிராவா, ஜுன்ஜுனுவில் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் பிரதேச தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.