ராஜினாமா முதல்வர் சூசகம்

பெங்களூரு, ஜூலை 22 – முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதை எடியூரப்பா சூசகமாக தெரிவித்தார். பிஜேபி மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் கர்நாடக மாநிலத்தில் மீண்டும் பிஜேபியை ஆட்சியில் அமர்த்துவது தனது நோக்கம் என்றும் எடியூரப்பா கூறினார். கட்சி மேலிடத்தின் முடிவுக்கு தான் கட்டுப்பட்டு மேலிட தலைவர்களின் ஆலோசனை படி நடந்து கொள்வேன் என முதல்வர் எடியூரப்பா முதல்வர் பதவிக்கு ராஜினாமா செய்வது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். இம்மாதம் 25 அன்று மேலிடத்திலிருந்து தகவல் வரவுள்ளது. அவர்கள் எந்த ஆலோசனை மற்றும் உத்தரவுகள் விடுகின்றனரோ அதை நான் பின்பற்றுவேன். ஜூலை 26 முதலே கட்சியின் ஒருங்கிணைப்புக்கு கவனம் செலுத்தி கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதில் மும்முரமாக செயல்பட துவங்குவேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். இம்மாதம் 26 அன்று எடியூரப்பா முதல்வராகி இரண்டு ஆண்டுகள் நிரம்புகிறது. அரசின் இந்த இரண்டு ஆண்டுகளின் சாதனைகள் குறித்து விளக்க தனி நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பின்னர் , கட்சி மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவேன் என அவர் தெரிவித்திருப்பதன் வாயிலாகவே திங்கட்கிழமை அவர் தன் பதவியை ராஜினாமா செய்யும் வாய்ப்புள்ளதை சூசகமாக தெரிவித்துள்ளார். நகரின் காசரகான ஹள்ளியில் உள்ள கோதண்ட ஸ்வாமி கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தன்வந்திரி யாகத்தில் பங்கு கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் நான் கட்சி மேலிடத்தின் உத்தரவுகளை பின் பற்றுவேன். மொத்த நாட்டிலும் 75 வருடங்கள் தாண்டிய எவருக்கும் பாரதிய ஜனதா பதவிகளை கொடுக்கவில்லை. என்னுடைய பணிகள் குறித்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி . மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜெ பி நட்டா என இவர்கள் அனைவரும் 75 வயது தாண்டிய என்னை முதல்வராக்கி என் பற்றி தனி அக்கறை காட்டி பதவி அளித்துள்ளனர் என முதல்வர் தெரிவித்தார். நான் முதல்வராகி இரண்டு ஆண்டுகள் நிறைவு ஆகும் 26ன் தேதி அன்று மேலிடத்தின் உத்தரவுகளை பின் பற்றுவேன் . மேலிடத்தின் முடிவே என் முடிவு . மேலிடத்தின் எந்த முடிவுக்கும் நான் தயார். பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் அபிமானிகள் எந்த குழப்பமும் கொள்ள வேண்டாம். முன் வரும் நாட்களில் கட்சியை பலப்படுத்தி ஆட்சிக்கு மீண்டும் கொண்டு வருவது மட்டுமே என் குறி . என் சார்பாக யாரும் அறிக்கைகள் விட வேண்டாம். தவிர எவ்வித போராட்டங்களிலும் ஈடு பட வேண்டாம். கடந்த 2 நாட்களாக பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த 100க்கும் அதிகமான சாமியார்கள் எனக்கு ஆசீர்வாதம் செய்துள்ளனர். இதை என் வாழ்நாளில் நான் மறக்க முடியாது. அவர்களின் ஆசீர்வாதத்துடன் முன் வரும் நாட்களில் கட்சியை வளர்ப்பேன். மீண்டும் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்த தீவிரமாக செயல்படுவேன் என்றார்.