ராஜ்நாத்சிங் இலங்கைக்கு செல்கிறார் -ராணுவ ஒத்துழைப்பு வலுப்படுத்த ஆலோசனை

கொழும்பு ஆகஸ்ட். 31 – இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு செல்கிறார். அவர் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது இலங்கை அதிபர் ரனில் விக்ரம சிங்கேவை சந்தித்து பேச உள்ளார். அதேபோல் அரசியல் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கை ஆயுதப்படைகளுக்கு திறனை வளர்ப்பதில் உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்புத் துறைக்கு கடனாக சுமார் ரூ.1240 கோடியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இதில் இதுவரை ரூ.826 கோடி கடன் பயன் படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள இருதரப்பு ராணுவ உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துபதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சீனா போர்க்கப்பலான ‘ஹையாங்-24’ கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அந்த கப்பல், இலங்கைக்கு வந்து சென்ற சில நாட்களில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங்கின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக இலங்கையுடன் ராஜ்நாத்சிங் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனா, தனது ஆய்வு கப்பலான ஷியான்-6 யை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.