ராஜ்யசபா எம்பியாகும் சோனியா- ரேபரேலியில் பிரியங்கா போட்டி

டெல்லி: பிப்.14- ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. சோனியாவின் மகன் ராகுல் காந்தி ஏற்கனவே நேரு குடும்பத்தின் கோட்டைகளில் ஒன்றான அமேதியில் தோல்வி அடைந்தார். தற்போது நேரு குடும்பத்தின் மற்றொரு கோட்டையான ரேபரேலி தொகுதியையும் கைவிட்டு ராஜ்யசபா எம்.பி.யாகிறார் சோனியா காந்தி.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தது காங்கிரஸ் கட்சி. நேரு குடும்பத்தின் சொத்துகளைப் போல ரேபரேலி, அமேதி தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புகளை அள்ளி அள்ளி கொடுத்தன.
ரேபரேலி தொகுதி: 1952, 1957-ம் ஆண்டுகளில் நேருவின் மருமகனும் இந்திரா காந்தியின் கணவருமான ஃபெரோஸ் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அதன் பின்னர் 1967, 1971 லோக்சபா தேர்தல்களில் இந்திரா காந்தி போட்டியிட்டு வென்றார். 1980-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தியே வென்றார். 2004-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வென்றவர் சோனியா காந்தி. இத்தொகுதியில் சோனியா காந்தி 50% முதல் 80% வாக்குகள் வரை பெற்றவர்.
சோனியா காந்தி: ராகுல் காந்தி, நேரு குடும்பத்தின் பாரம்பரியமான அமேதி தொகுதியை கைவிட்ட நிலையில் தற்போது சோனியா காந்தி ரேபரேலி தொகுதியை கைவிட்டு விட்டார். ராஜஸ்தான் மாநில்த்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக முடிவு செய்துள்ளார் சோனியா. மாமியாரை தொடர்ந்து: சோனியாவின் மாமியார் இந்திரா காந்தி அம்மையார் 1964-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். ஜவஹர்லால் நேரு மறைவைத் தொடர்ந்து ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார் இந்திரா காந்தி அம்மையார். தற்போது நேரு குடும்பத்தில் இந்திரா காந்தியை தொடர்ந்து 2-வது நபராக சோனியா காந்தி ராஜ்யசபா எம்பியாகிறார். பிரியங்கா காந்தி: உ.பி.யில் நேரு குடும்பத்தின் கோட்டைகளில் ஒன்றான அமேதியை ராகுல் காந்தி காலி செய்து விட்டார். சோனியா காந்தி மற்றொரு கோட்டையான ரேபரேலியில் போட்டியிடப் போவதில்லை. அதேநேரத்தில் ரேபரேலி தொகுதியில் மகள் பிரியங்கா காந்தியை சோனியா காந்தி நிறுத்தக் கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரேபரேலியில் சோனியா காந்திக்கு கிடைத்த பேரனுதாபமும் ஆதரவு அலையும் பிரியங்கா காந்திக்கு அப்படியே கிடைக்குமா? அல்லது அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு கிடைத்த ரிசல்ட்தான் பிரியங்கா காந்திக்கும் கிடைக்குமா? என்ற பதற்றத்தில் இருக்கிறதாம் காங்கிரஸ்.