ராணுவ செலவுகளை குறைக்கும் திட்டம்

டெல்லி:ஜூன்.14- ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு இன்று அறிமுகம் செய்கிறது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில், அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆளெடுப்பு திட்டத்தை முப்படைகளின் தளபதிகள் இன்று வெளியிடுகின்றனர். அதன்படி முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். 4 ஆண்டுகள் முடிவில் 80 விழுக்காடு வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். அதேநேரத்தில் திறமை மற்றும் காலி இடங்களை பொறுத்து 20 விழுக்காடு பேர் பணியை தொடர அனுமதிக்கப்படுவர்.
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கான செலவு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும் என தெரிகிறது. 8 நாடுகளில் இதுபோன்று செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
பாதுகாப்புப் படைகளின் செலவினம் மற்றும் வயது விவரங்களை குறைப்பதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது.