ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

புதுடெல்லி: டிச.1- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சீனாவுடன் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளாக மோதலை சந்தித்துள்ள நிலையில் மிகப் பெரிய அளவிலான ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தகொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்சார்பு இந்தியா இலக்குகளை அடைய உத்வேகம் அளிக்கும்.விமானப்படைக்கு 97 தேஜஸ்போர் விமானங்கள், விமானப்படை மற்றும் தரைப்படை பயன்பாட்டுக்கு 156 பிரச்சாந்த் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. விமானப்படைக்கு 83 தேஜஸ் போர்விமானங்களை வாங்க, எச்ஏஎல் நிறுவனத்திடம் ரூ.48,000 கோடி மதிப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ம் ஆண்டுஒப்பந்தம் செய்தது. விமானப்படைக்கு வாங்கப்படும் தேஜஸ் போர் விமானங்களின் எண்ணிக்கை 180-ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.