ராமநவமியையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜைசமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்


கிருஷ்ணகிரி, ஏப்.22-
ராமநவமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராமநவமியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேயர் ராகவேந்திர சாமி கோவிலில் நேற்று காலை கணபதி, நவகிரஹ ஹோமம் மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து தினமும் மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 27-ந் தேதி ராமர், சீதா திருக்கல்யாணமும், ராமன் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இதேபோல் திருவண்ணாமலை சாலையில் உள்ள ராமர் கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்களில் ராமநவமியையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமுக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஓசூர்
இதேபோன்று ஓசூர் போஸ் பஜாரில் உள்ள கோதண்டராமர் கோவில், ராம்நகர், புதிய ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ பகுதியில் உள்ள ராமர் கோவில்கள், பண்டாஞ்சநேயர் கோவில் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று ராமநவமியையொட்டி சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதே போல், சூளகிரி கீழ்த்தெருவில் உள்ள சீதாராமர் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், பழரசம் வழங்கப்பட்டது.