இராமநாதபுரம்: ஆகஸ்ட் 19
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்துவுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் – அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து தங்கச்சி மடத்தில் இன்று இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று ரயில் மறியல் நடக்க உள்ளது. தமிழக மீனவர்களை நடுக்கடலில் கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து வீசுவதும், விசைப் படகுகளை பறிமுதல் செய்வதும் என இலங்கை கடற்படையினரின் அராஜகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். மேலும், அவர்களுடைய மோட்டார் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கின்றனர். வலைகள் அறுப்பு இதனால் படகுகள் சேதமடைவதோடு, மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கையை விடுத்தவண்ணம் உள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2 மாதங்களில் மட்டும், மொத்தம் 64 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மாதம், 1 வருடம், 2 வருடங்கள் சிறை தண்டனை பெற்று 24 மீனவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.இதையடுத்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யய வேண்டும், கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணவும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தரவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நடத்தி வருகின்றனர். தொடர்கிறது ஆர்ப்பாட்டம் அதன்ஒருபகுதியாக, கடந்த ஆகஸ்ட் 13 அன்று கண்டன ஆர்ப்பாட்டம், ஆகஸ்ட் 15 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று செவ்வாய் கிழமை மீனவர்கள் தங்கக்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். முன்னதாக, ராமேஸ்வரத்தில் ஆர்டிஓ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், இன்று தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்..















