
ஹரித்துவார்: ஆகஸ்ட். 22 – உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இப்பணியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.இதன் பொதுச் செயலாளர் சம்பத் ராய், நேற்று முன்தினம் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகருக்கு வந்தார். இங்குள்ள சாதுக்கள் மற்றும் துறவிகளை சந்தித்து, ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அயோத்தியில் பிரம்மாண்ட கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. கோயிலின் கருவறை மற்றும் சன்னதி தயாராகி விட்டது. வரும் 2024-ம் ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்குப் பிறகு, 16 முதல் 24-ம் தேதிக்குள் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படும்.கோயிலில் முதல் தளம் அமைக்கும் பணியில் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. முதல் தளம் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு மத்தியில் கட்டுமானப் பணிகள் தொடரும். இதனால் எந்த இடையூறும் ஏற்படாது. சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும்படி சாதுக்கள் மற்றும் துறவிகளுக்கு அழைப்பு விடுத்தேன். இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.