ராமர் கோயில் குறித்து பிரதமர் பகிர்ந்த வீடியோ குறிப்பு

புதுடெல்லி: ஜன. 23: அயோத்தியில் நேற்று (ஜன.22) ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், “ராமர் கோயில் குறித்து நாம் பார்த்தவை நினைவுகளில் பொறிக்கப்படும்” என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. பிரதமர் மோடி காலை 10.30 மணி அளவில் அயோத்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோயில் வளாகத்துக்கு வந்தார்.
பகல் 12.10 மணி அளவில் பால ராமருக்கான வஸ்திரம், வெள்ளி குடை ஆகியவற்றை தாம்பாளத்தில் ஏந்தியபடி கோயிலுக்குள் நுழைந்தார். கோயில் கருவறைக்குள் சென்று சங்கல்ப பூஜை செய்தார். உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்டோரும் பூஜையில் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி அனைத்து பூஜை, வழிபாடுகளையும் செய்தார்.
மதியம் 12.29 மணி முதல் 12.45 மணிக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, பால ராமரின் பாதத்தை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். இதன்பிறகு சுவாமி கோவிந்த் தேவ் வழங்கிய புனித நீரை பருகிய பிரதமர் மோடி, 11 நாள் விரதத்தை நிறைவு செய்தார். ஒளிமயமான எதிர்காலம்: பிரதிஷ்டை நிகழ்வை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பகவான் ராமர் இருக்கிறார். ஆனால் அவருக்கு கோயில் கட்ட பல ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்த வேண்டிய சூழல் எழுந்தது. இந்த நேரத்தில் இந்திய நீதித் துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ராமர் கோயில் கட்ட பல்வேறு தியாகங்களை செய்த கரசேவகர்கள், துறவிகளுக்கு நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். பல நூற்றாண்டு பொறுமை, தியாகம், தவத்தின் பயனாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பால ராமர் இனிமேல் கூடாரத்தில் இருக்க தேவையில்லை. அவர் இப்போது புதிய கோயிலில் வாழ்கிறார்.
‘‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று பகவான் ராமரிடம் வேண்டிக் கொள்கிறேன். கடந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நமது முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கருதுகிறேன். ஏதோ ஒரு குறையால் நம் கனவு நிறைவேறாமலே இருந்தது. நீண்ட போராட்டத்துக்கு பிறகு,அயோத்தியில் பிரம்மாண்ட கோயில் கட்டி முடித்துவிட்டோம். அடுத்து, பாரதத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். வலுவான, வளமான, ஆன்மிக பூமியாக பாரதத்தை கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த 21-ம் தேதி மலர்தூவி வழிபாடு நடத்தினேன். அதுமுதல் ஒளிமயமான காலம் தொடங்கிவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.