ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் கைது

ராமேசுவரம்:ஜனவரி. 24 – ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஐசக், ஆரோக்கிய தாஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்த ஐசக், ஆரோக்கியதாஸ், சிசேரியன், சமாதான பாபு, நிஷாந்த், முருகேசன் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
அன்புமணி கண்டனம்: பாமக தலைவர் அன்புமணி நேற்று எக்ஸ் வலைதளப்பதிவில், “ தமிழக மீனவர்களை இலங்கை படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.