ராமேஸ்வரம் ஓட்டல் மீண்டும் தொடக்கம்

பெங்களூரு, மார்ச் 8: குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரத்துக்குப் பிறகு, மகா சிவராத்திரி தினமான இன்று காலை ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டல் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது.
காலையில் பூஜை வழிபாடுகள் முடிந்து வாடிக்கையாளர்களுக்காக ஓட்டல் திறக்கப்பட்டது, காலையில் குறைவாக இருந்த வாடிக்கையாளர்கள் பிற்பகல் அதிக அளவில் திரண்டு வந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
குண்டுவெடிப்பை தீவிரமாக எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் ஓட்டலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டலின் நுழைவு வாயில் அருகே 2 மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாளை முதல் ஒவ்வொரு வாடிக்கையாளரும் உள்ளே அனுமதிக்கப்படுவதற்கு முன் மெட்டல் டிடெக்டர்கள்மூலம் பரிசோதிக்கப்படுவார்கள்.
ஓட்டலைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன. இதற்கிடையில், போலீஸ் கண்காணிப்பில் பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த 1 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் காயமடைந்தனர். வெடிகுண்டு வைத்த நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ராமேஸ்வரம் ஓட்டல் குண்டுவெடிப்புக்குப் பிறகு, நகரின் மற்ற ஓட்டல்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஹோட்டல் சங்கம் யோசித்து வருகிறது. ஓட்டல் சங்க கூட்டத்தில் மெட்டல் டிடெக்டர் பொருத்துதல், வாடிக்கையாளர்கள் பைகளை வெளியில் வைப்பது குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. தற்போது ராமேஸ்வரம் ஓட்டலில் மட்டும் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகளும் தொடங்கப்பட்டுள்ளது.