ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஏப். 11-
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ)தாக்கல் செய்த மனுவை விசாரித்தபின், அலோபதி மருந்துகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பாபா ராம்தேவ் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
எனினும் அதை மீறி பதஞ்சலிநிறுவனம் தொடர்ந்து செயல்பட்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தவிட்டது.இந்த சூழ்நிலையில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மன்னிப்பு கோரியிருந்தனர். இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் நீதிபதி ஏ. அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புநேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கோரிய மன்னிப்பு என்பது வெறும் காகிதத்தில் மட்டும்தான் உள்ளது. எனவே,இந்த உதட்டளவிலான மன்னிப்பை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். அவர்களின் நடவடிக்கையை வேண்டுமென்றே உறுதிமொழி மீறலாக நாங்கள் கருதுகிறோம்.
ராம்தேவ், பாலகிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறி, முறையற்ற பிரமாணப் பத்திரங்களை அவர்கள் தாக்கல் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான விளைவுகளைஅவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும். இவ்வழக்கில் நாங்கள்கருணை காட்ட விரும்பவில்லை.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.