ராம நவமி – பெங்களூரில் நாளை இறைச்சி விற்பனைக்கு தடை

பெங்களூரு, ஏப். 16: ராம நவமியை முன்னிட்டு பெங்களூரில் நாளை இறைச்சி விற்பனைக்கு பிபிஎம்பி தடை விதித்துள்ளது.
ராம நவமியை முன்னிட்டு புதன்கிழமை (ஏப். 17)பெங்களூரு மாநகரம் முழுவதும் ஒரு நாள் இறைச்சி விற்பனைக்கு மற்றும் விலங்குகளை வெட்ட தடை விதித்து பெங்களூரு மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநவமியை முன்னிட்டு நகரில் இறைச்சி விற்பனை மற்றும் விலங்குகள் வதைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிபிஎம்பியின் கால்நடை பராமரிப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பெங்களூரில் ஒவ்வொரு முறையும், பொதுவாக இந்து பண்டிகைகளின் போது பிபிஎம்பி இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்து மதத்தில் ராம நவமி பண்டிகைக்கு சிறப்பு உண்டு. மத நம்பிக்கைகளின்படி, இது ராமர் பிறந்த நாள் என கூறப்படுகிறது. ராம நவமி அன்று ராமருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இந்த நாளில், ராமருடன், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரை வழிபடுகின்றனர்.ராம நவமி விழா நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. மத நம்பிக்கையின் படி, ராமர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக பிறந்தார். சித்திரை மாதம் ஒன்பதாம் நாளில் அயோத்தியின் மன்னன் தசரதனின் மூத்த மகனாக ராமர் பிறந்தார். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி திருநாள் ராமர் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.