ரிக்சா தொழிலாளி வீட்டில் அமித்ஷாவின் மதிய உணவு


தோம்ஜூர், ஏப். 8- மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ரிக் ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக தொடர்கிறது.
இந்நிலையில் ஹவுரா மாவட்டம் தோம்ஜூர் சட்டசபை தொகுதியின் பா.ஜ. வேட்பாளர் ரஜிப் பானர்ஜியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நேற்று காலை பிரசாரம் செய்தனர்.
பின் அங்குள்ள ஒரு ரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷா, நட்டா, வேட்பாளர் ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அவர்களுக்கு சாதம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை ரிக் ஷா தொழிலாளி குடும்பத்து பெண்கள் பரிமாறினர். ரிக் ஷா தொழிலாளியும் அவர்களுக்கு முன் அமர்ந்து தேவையானதை கேட்டு வழங்கியதுடன் அவர்கள் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.