ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

பாட்னா: பிப். 6: பிஹார் சட்டப்பேரவையில் வரும் 12-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தெலங்கானா ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிஆட்சி நடைபெற்றது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார்முதல்வராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மெகா கூட்டணியிலிருந்தும் வெளியேறினார். பின்னார் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, வரும் 12-ம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவருக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், எம்எல்ஏ-க்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கக்கூடும் என அச்சமடைந்த காங்கிரஸ் கட்சி, 19-ல் 17 பேரை தெலங்கானாவில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது. மேலும் 2 எம்எல்ஏ-க்கள் வேறு வேலை இருந்ததால் அங்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான விஜய் சின்ஹா கூறும்போது, “காங்கிரஸ் கட்சியின்இந்த செயல் வாரிசு அரசியல் என்ற மனப்பான்மையை பிரதிபலிப்பதாக உள்ளது. எம்எல்ஏ-க்களை அவர்கள் நம்ப வேண்டும். ஆனால் அவர்களை தொழிலாளர்களைப் போல நடத்துகின்றனர். இது பாஜகவின் குணாதிசியம் இல்லை” என்றார்.
பிஹார் சட்டப்பேரவையில் 243 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 122 பேரின் ஆதரவு தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4, சுயேச்சை 1 என 128 பேரின் ஆதரவு நிதிஷ் குமாருக்கு உள்ளது.இதன்மூலம் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது உறுதி என கூறப்படுகிறது.