ரிஸ்வான், ஃபகர் ஜமான் அபாரம்: பாகிஸ்தான் பழி தீர்ப்பு வெற்றி

டப்ளின், மே 13- டப்ளினில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியது. இந்த முறை டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.5 ஓவர்களில் 195/3 என்று அபார வெற்றி பெற்றது.பந்து வீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரீடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அப்பாஸ் அஃப்ரீடி 2 விக்கெட்டுகளையும் முகமது ஆமிர், நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பேட்டிங்கில் 6 ரன்களுக்கு சயீம் அயூப் விக்கெட்டைப் பறிகொடுத்ததுடன் பாபர் அசாம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கண்டது. பாகிஸ்தான் ஆனால் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 ரன்களையும் பகர் ஜமான் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 78 ரன்களையும் விளாச அசாம் கான் 10 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுக்க 16.5 ஓவர்களில் அயர்லாந்து கதை முடிந்தது. அயர்லாந்து பவுலர்களில் பென் ஒயிட் மட்டுமே ஓவருக்கு 10 ரன்களுக்குள் விட்டுக் கொடுத்தார். மற்றவர்களெல்லாம் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விளாசப்பட்டனர். ரிஸ்வானும் பகர் ஜமானும் 78 பந்துகளில் 140 ரன்களை அடித்து நொறுக்கினர். ரிஸ்வானைத் தேவையில்லாமல் ஓபனிங்கிலிருந்து கழற்றி விட்ட முயற்சிக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம் ரிஸ்வான் அற்புதமான ஸ்லாக் ஸ்வீப் ஷாட்களை பவர் ப்ளேயில் அடித்தார், அதோடு ரிஸ்வானின் பெரிய பலம் என்னவெனில் அவர் பந்துகளை பிளேஸ் செய்வதுதான். இடைவெளியை அபாரமாகக் கண்டுபிடிக்கும் ஒரு சில டாப் வீரர்களில் ரிஸ்வானும் ஒருவர். பகர் ஜமானின் அடிதடி திறமைகளை ஏற்கெனவே இந்திய அணி ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபியில் கண்டது, ஐசிசி 2023 உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் நியூஸிலாந்தின் 401 ரன்கள் இலக்கை எதிர்த்து பகர் ஜமான்63 பந்துகளில் சதம் கண்டதோடு 81 பந்துகளில் 126 ரன்களை 8 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் அடிக்க பாகிஸ்தான் 25 ஓவர்கலில் 200/1 என்று டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்றதை மறக்க முடியுமா என்ன? நேற்றும் அப்படிப்பட்ட ஒரு ஆட்டம்தான் அவர் ஆடியது. ஆனால் அப்படியும் அயர்லாந்து கொஞ்சம் டைட் செய்தது, பாகிஸ்தானுக்கு ஓவருக்கு 10 ரன்கள் வரை தேவைப்படுமாறு சூழ்நிலை மாறியது, ஆனால் அப்போதுதான் யங்கின் ஓரே ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட தேவைப்படும் ரன் விகிதம் 10லிருந்து 8க்கும் கொஞ்சம் அதிகமாகக் குறைந்தது. ஜமான் அவுட் ஆன பிறகு அசாம் கான் 10 பந்துகளில் 30 என்று மேட்சை முடித்து வைத்து விட்டார், ரிஸ்வான் 75 நாட் அவுட். ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானின் பெரிய பலவீனம் பவுலிங்காக இருக்கலாம் என்று தெரிகிறது. அயர்லாந்து பேட்டர்களை இரண்டாவது முறையாக பவர் ப்ளேயில் ஷாஹின் ஷாவினாலும் முகமது ஆமீரினாலும் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. ஆண்டி பால்பர்னி, பால் ஸ்டரிங் இருவரையும் அட்டாக் செய்தார். இருவரையும் ஷாஹின் வீழ்த்தினாலும் அவருக்கு இன்னும் டி20 பவுலிங் பிடிபடவில்லை என்றே தெரிகிறது. தவறான பீல்ட் செட் அப் கேட்டு பைன் லெக்கை முன்னால் வைத்து ஒரே ஓவரில் 21 ரன்களை விட்டுக் கொடுத்தார் அஃப்ரீடி. இது மிடில் ஓவரில் நடந்தது. அயர்லாந்து வீரர் கேம்பர் 2 சிக்சர்களை இந்த ஓவரில் அடித்தார், அதில் கவர் திசையில் அடித்த சிக்ஸ் கிளாஸ் ரகம். கரேத் டெலானியும் அப்ரீடி ஆமீர் இருவரையும் கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் விளாசப்பட்டனர். அப்ரீடியும் ஆமிரும் தங்களது கோட்டா 8 ஓவர்களில் 93 ரன்களை விட்டுக் கொடுத்தது பாகிஸ்தானுக்கு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.