ரூ.1.26 கோடி திருடிய காஷ்மீர் வங்கி அதிகாரி கைது

ஜம்மு: மார்ச் 18 ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் பூனி. இங்கு ஜம்மு காஷ்மீர் வங்கிக் கிளை அமைந்துள்ளது. இதில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார் இஸ்விந்தர் சிங் ரன்யால்.இவர், அந்த வங்கியில் செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் இருந்து 3 ஆண்டுகளாக ரூ.1.26 கோடி களவாடியுள்ளார்.
கடந்த மாதம் செயல்பாட்டில் உள்ள வாடிக்கையாளர் கணக்கு ஒன்றிலிருந்து பணத்தை எடுத்துள்ளார். தனது கணக்கில் இருந்து தனக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டதைப் பார்த்த அந்த வாடிக்கையாளர் இது குறித்து ரியாசி மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதை விசாரிக்க தனிக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் அக்குழு நேற்றுமுன்தினம் வங்கி உதவி மேலாளர் இஸ்விந்தர் சிங் ரன்யாலை கைது செய்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி மோஹிதா ஷர்மா கூறுகையில், “ரன்யால் கடந்த 3 ஆண்டுகளாக, அவர் பணியாற்றி வந்த வங்கியில், செயல்பாட்டில் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். இதுவரையில் ரூ.1.26 கோடி பணத்தை அவர் முறைகேடாக எடுத்துள்ளார். இது குறித்து எங்களுக்கு புகார் வந்ததையடுத்து தற்போது அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.