ரூ.1.81 கோடி ரொக்கம் பறிமுதல்

சென்னை: ஏப். 6: மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதிநடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைகொடுத்து வாக்குகளைக் கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரியஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆர்.ஏ.புரம் 3-வது குறுக்குத் தெருவில் தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்தவாகனம் ஒன்றை மறித்து சோதனைசெய்தனர். வாகனத்தில், கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 81 லட்சத்து 52,100 இருந்தது தெரியவந்தது.
வாகனத்தில் வந்த ஆவடி காவேரிபேட்டை கிருஷ்ணமூர்த்தி (26),வியாசர்பாடி ஷேக் கலாம் (27),சிவக்குமார்(26) ஆகியோரிடம் பணத்துக்கான ஆவணங்கள் இல்லை.
இதையடுத்து, அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பணம் பறிமுதல் குறித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்துநடத்தப்பட்ட விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் கொண்டு வரப்பட்ட பணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உரிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லும்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.