ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுதொகுப்பு – டோக்கன் விநியோகம்

சென்னை: ரூ. ஜனவரி. 7 – 1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், கடந்த ஆண்டுகளைபோல ரொக்கப் பணம் அதில் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தீவிர ஆலோசனைக்கு பின்னர், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்காது.
பொங்கல் பண்டிகை 15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முன்னதாகவே தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் ரூ.1000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்படவுள்ளது.
அதனால், ரேசன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் வழக்கம்போல பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்படவுள்ளது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த தேதியில், எந்த நேரத்தில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.