ரூ.1,368 கோடி தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனம் – பின்புலம் என்ன

புதுடெல்லி:மார்ச் 16- லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஓட்டல்சர்வீசஸ் நிறுவனம் கடந்த 2020 அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிக்கு நன்கொடை அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட 337 பக்கத் தரவுகள் மூலம் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது. முன்னர் மார்ட்டின் லாட்டரி ஏஜென்சீஸ் என்று அறியப்பட்ட மார்ட்டின் நடத்தும் பியூச்சர் கேமிங்நிறுவனம் 2 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான விற்று முதலுடன் இந்தியாவில் லாட்டரி துறை விற்பனையில் முன்னணியில் உள்ளது.
கோவையில் பதிவு செய்யப்பட்ட பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா என்ற துணை நிறுவனம் சிக்கிம் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு காகித வடிவிலான லாட்டரியை விநியோகித்து வருகிறது.சிக்கிம் லாட்டரி தொடர்பான பல மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கடந்த 2011-ல் விசாரிக்கத் தொடங்கியது. இதில், மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் 2009 ஏப்ரல் முதல் 2010 ஆகஸ்ட்-க்கு இடையில் மாநில அரசை ஏமாற்றி ரூ.910 கோடி வருமானத்தை சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகள் விசாரணை நடத்தின.
இதையடுத்து நடைபெற்ற சோதனைகளில் பல கோடி மதிப்புள்ள மார்ட்டினின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதுவரை மார்ட்டினுக்கு சொந்தமானரூ.457 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி கூறுகையில், “பியூச்சர் கேமிங் நிறுவனம் மிக நீண்ட காலமாகவே சிபிஐ, ஈடி, ஐடி போன்ற விசாரணை அமைப்புகளின் ரேடாரின் கீழ் இருந்து வருகிறது. எனவே, இதையும், தேர்தல் பத்திரங்கள் வாங்கியதையும் இணைத்துப் பார்க்க முடியாது” என்றார்.
எச்சரிக்கைக்கு பிறகு அதிகம் வாங்கிய லாட்டரி மன்னன் மார்ட்டின்: மார்ட்டின் நிறுவனங்களுடன் தொடர்புடைய மோசடி குறித்து லாட்டரி தொழில் நடத்தும் எட்டு மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே எச்சரிக்கை செய்தது. இதிலிருந்து, மாநிலங்கள் விலகி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. 2019 செப்டம்பரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 10 நாட்களில் பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் நிறுவனம் மொத்தம் ரூ.190 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.