ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலை

தூத்துக்குடி: பிப். 26: வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்திஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, தூத்துக்குடி அருகேசில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைப்பதற்காக இந்நிறுவனத்துக்கு 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், தென் தமிழகத்தின் முதலாவது மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையான வின்ஃபாஸ்ட்தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.விழாவுக்கு வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தலைமை வகித்தார்.திட்டம் குறித்து தமிழக தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கினார்.சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மீன்வளத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பின்னர், செய்தியாளர்களிடம் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் கூறியதாவது:
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 50 நாட்களுக்குள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறோம். முதல்கட்ட பணிகள் ரூ.4 ஆயிரம்கோடியில் நடைபெறும். இதில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025-ம் ஆண்டின் மத்தியில் உற்பத்தியாகி வெளியே வரும்.