ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல்

சென்னை/மதுரை: மார்ச்.2- சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவர் நேற்று அதிகாலை மதுரை ரயில் நிலையத்தில் இறங்கினார். ரகசிய தகவலின்பேரில் அவரை சுற்றிவளைத்த வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அவரிடம் நடத்திய சோதனையில், போதைப் பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
விசாரணையில், அவர் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் பிரகாஷ் (42) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 30 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் அதிகாரிகள் சென்னை விரைந்தனர். அதற்குள் பிரகாஷின் மனைவி வீட்டிலிருந்த போதைப் பொருள் பாக்கெட்டுகளை குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார். அவை கொடுங்கையூர் குப்பைமேட்டுக்கு போய்விட்டன. தொடர்ந்து,
அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், 6 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.180 கோடியாகும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதுரை கே.கே.நகர் பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவரது வீட்டில் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், சென்னையைச் சேர்ந்த அருண், அன்பு ஆகியோரைத் தேடி வருகிறோம்.
சென்னையில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை,
ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு கடத்த முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே, மதுரையில்சிக்கிய நபருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல்கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.பிரகாஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்து, விசாரித்து வருகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.