ரூ.2 கோடி தங்கம், பறிமுதல்

மங்களூரு, ஜன. 21- ரூ.2 கோடி தங்கம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி வருவதை தடுக்கவும், கண்காணிக்கவும் சுங்க வரித்துறையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் கர்நாடக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை மொத்தம் 8 பயணிகளிடம் இருந்து ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைப்பற்றி உள்ளனர். அபுதாபி மற்றும் துபாயில் இருந்து வந்த விமானங்களில் வந்திருந்த பயணிகளிடம் சோதனை நடத்தியதில் இந்த கடத்தல் தங்கம் சிக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.