ரூ.2,000நோட்டுகளை அஞ்சல் மூலம் அனுப்பலாம்

புவனேஸ்வர்: நவம்பர். 3 – ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதியோடு முடிந்துள்ள நிலையில், மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரில் வந்து பணத்தை மாற்றிக்கொள்கின்றனர்.
இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, பணத்தை மாற்றித் தருவதற்கு முகவர்கள் கமிஷன் பெறுவதாக தகவல் வெளிவந்துள்ளன. இதையடுத்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினர் ரிசர்வ் வங்கியின் பணப்பரிமாற்ற கவுன்டருக்கு விரைந்து, அங்கு பணம் மாற்றிக் கொண்டிருப்பவர்கள் பொதுமக்களா அல்லது முகவர்களாக என்று சோதனை நடத்தினர்.
இந்நிலையில், மக்கள் ரூ.2,000 நோட்டுகளை அஞ்சல் மூலம் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் ரோஹித் தாஸ் தெரிவித்துள்ளார். இதனால், மக்களுக்கு பயண அலைச்சலும் செலவும் மிச்சமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.