ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை- இபிஎஸ்

தூத்துக்குடி: மார்ச் 27:
திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை யடிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி கூறி னார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி யில் நேற்று அதிமுக சார்பில்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பழனிசாமிபேசியதாவது: தமிழகத்தில் மிக்ஜாம் என்ற ஒரு புயலுக்கே முதல்வர் ஸ்டாலின் தடுமாறிவிட்டார். ஆனால், அதிமுக ஆட்சியில்இருந்தபோது கஜா, வர்தா, தானே என பல புயல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டோம்.
கடந்த டிச. 17, 18-ல் தூத்துக் குடியில் கனமழை பெய்து, பொது மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். இந்திய வானிலை ஆய்வு மையம் 4 நாட்களுக்கு முன்பே எச்சரித்தும், முதல்வர் உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார்.
மழை வெள்ளத்தால் மக்கள் தவித்தபோது, அவர்களை சந்திக்க அவர் வராமல், இண்டியா கூட்டணி கூட்டத்துக்காக டெல்லி சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முறையான நிவாரணம் வழங்கவில்லை.
அதிமுக கள்ளக் கூட்டணி வைத் திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். திமுக தான் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது. எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் நலன்தான் பெரிது. சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டும், சுதந்திர மாக செயல்பட வேண்டும் என்பதற் காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி, அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமைத் துள்ளோம்.
ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘கோ பேக் மோடி’ என்றும், ஆளுங்கட்சியான பிறகு ‘வெல்கம் மோடி’ என்றும் இரட்டை வேடம் போடுகிறார். வெளியே வேஷம், உள்ளே பயம், நேரில் பார்த்தால் சரண்டர், இதுதான் அவர்கள் நிலை. (அப்போது பிரதமருடன், முதல்வர் ஸ்டாலின் இருக்கும் படத்தையும், டெல்லியில் பிரதமரை, அமைச்சர் உதயநிதி சந்தித்தபோது எடுத்த படத்தையும் கூட்டத்தினரிடம் பழனிசாமி காண் பித்தார்).
தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,255 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். அதனால்தான் நாட்டிலேயே 2-வது ராக்கெட் ஏவுதளம் இங்கே அமைகிறது. திமுகவால் நீட் தேர்வு விலக்கைநடைமுறைப்படுத்த முடியவில்லை.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.