
மும்பை,மார்ச் 8- ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த 2 நைஜீரியர்கள் மும்பை விமான நிலையத்தில் பிடிபட்டனர். ரகசிய தகவல் நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து அடிஸ் அபபா வழியாக மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்பட உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை வந்த அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது 2 நைஜீரிய பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் போதைப்பொருள் எதுவும் கிடைக்கவில்லை. விழுங்கி கடத்தல் எனவே அவர்கள் வயிற்றில் விழுங்கி போதைப்பொருளை கடத்தி வந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதிகாரிகள் கோர்ட்டு அனுமதியுடன் 2 பயணிகளுக்கும் மருத்துவ சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேரும் வயிற்றில் கேப்சூல் வடிவில் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் வயிற்றில் இருந்தும் 2.97 கிலோ கொகைகன் போதைப்பொருளை டாக்டர்கள் உதவியுடன் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.30 கோடி என வருவாய் புலனாய்வு இயக்குனரக பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். போதைப்பொருள் கடத்தி வந்த 2 நைஜீரியர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.