ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – ஸ்டாலின் பெருமிதம்

சென்னை:பிப்ரவரி. 7 – “ஸ்பெயின் நாட்டுக்கு தான் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் ஒரு சாதனைப் பயணமாக அமைந்தது. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஸ்பெயினில் இருந்து இன்று (பிப்.7) காலை தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது பயணத்தைப் பற்றி விவரித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “உங்கள் வாழ்த்துகளைப் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைப் பெற்றுத் திரும்பியிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாகச் சென்றேன். ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது. முதலீட்டாளர்களுக்கு தமிழகத்தில் உள்ள தொழில் முதலீடு வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். இதற்காக, முன்னணி முதலீட்டாளர்களை தனித்தனியாக சந்தித்தேன். ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன. ரூ.3440 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு தனிப்பாதையில் செல்வதாக நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் வந்திருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை எடுத்துரைக்கிறது” என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்,
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்தார். அப்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.” எனக் கூறிச் சென்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை தொடர்பான கேள்விக்கு, “ஆம். அந்த உரையை நான் பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ் தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறினார்.முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, கடந்த ஜன.27-ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரின் செயலர் உமாநாத், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு உள்ளிட்டோர் சென்றனர். ஸ்பெயினில் கடந்த ஜன.28-ம் தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலீடு செய்ய தமிழகம் வரும்படி முதல்வர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பல்வேறு பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து முதலீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.இதுகுறித்து, முதல்வர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது. மேப்ட்ரீ நிறுவனத்துடன் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொண்டேன்.