சென்னை: செப் 6-
சசிகலாவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பண மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2020ல் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஆலை, அதன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருடன் தொடர்புடைய, 187 இடங்களில், 2017 நவம்பரில், வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள, ஜெயா டிவி அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்டவற்றிலும் சோதனை நடந்தது. ஐந்து நாட்களாக நடந்த இந்தச் சோதனையில், சசிகலா குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை துவக்கி 1,500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும், பல நுாறு கோடி ரூபாய்க்கு சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் சிக்கின. சோதனை நடத்திய இடங்களில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, போலி நிறுவனங்கள், சொத்துகள் விபரங்களை, வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது. மத்திய அரசு, கடந்த 2017 நவம்பர் 8ல், 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அதிரடியாக அறிவித்தது. இந்த சமயத்தில், சசிகலா ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காஞ்சிபுரம் ஒரகடத்தில் சர்க்கரை ஆலையையும், மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி சசிகலா வாங்கியதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, ஆகஸ்ட் மாதத்தில் சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் இது தொடர்பாக சோதனை நடத்தியது. இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரில், 2020-ஆம் ஆண்டில் வருமான வரித துறை பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், 2017 நவம்பரில் சசிகலா மற்றும் பிறரின் சொத்துக்களில் பினாமி சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, குற்றம் சாட்டக்கூடிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி விவகாரங்களை நிர்வகித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், சத்தியப்பிரமாணமாக அளித்த வாக்குமூலத்தில், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக மொத்தமாக ரூ.450 கோடியை பழைய ரூபாய் நோட்டுகளாகப் பெற்றதாகவும், அதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்றும் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.


















