ரூ. 5 கோடி கஞ்சா பறிமுதல்

பெங்களூர்: செப்டம்பர். 13 – போதை பொருள்கள் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பெங்களூர் போலீசார் ரயில் வாயிலாக கஞ்சாவை திருட்டுதனமாக ஏற்றிவந்த ஒரு கும்பலை வலை வீசி பிடித்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை கைப்பற்றுவதில் வெற்றியடைந்துள்ளனர். கெம்பேகௌடா நகர் போலீசார் ஒரு பெண் உட்பட ஐந்து குற்றவாளிகளை கைது செய்து 2 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 506 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இதே வேளையில் ஜெயநகர் போலீசார் மூன்று கோடி ரூபாய்கள் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா மற்றும் ஆறு கிலோ ஆஷிஷ் எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக நகர போலீஸ் ஆணையர் பிரதாப் ரெட்டி பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கெம்பேகௌடா நகர் போலீசார் ரயிலில் காஞ்சனாவை கடத்திய நவாஜ் பாஷா , நூர் அஹமத் , முபாரக் (பெண்) , இம்ரான் பாஷா , மற்றும் கிரண் என்ற பங்காரப்பா ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கெம்பாபூதி ஏரி அருகில் கஞ்சாவை விற்பனை செய்துகொண்டிருந்தபோது நடவடிக்கையில் ஈடுபட்ட கெம்பேகௌடா நகர் போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் ஒரிஸ்ஸாவின் மல்கான்கிரியிலிருந்து கஞ்சாவை திருட்டுதனமாக கடத்தி வந்து கெங்கேரியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கிவைத்துள்ளனர். அந்த வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் 500 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக போலீஸ் ஆணையர் தெரிவித்தார். குற்றவாளிகள் பத்து முதல் இருபத்தைந்து கிலோ பைகளில் கஞ்சாவை நிரப்பிக்கொண்டு அவற்றின் மீது நறுமண திரவத்தை தெளித்து வாசனை தெரிய வராத வகையில் ரயிலின் இருக்கைகளுக்கு கீழே ஒளித்து வைத்து கடத்திவந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பல நாட்களாக கஞ்சாவை புவனேஸ்வரிலிருந்து திருட்டு தனமாக நகருக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர் எனபதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதே வேளையில் ஜெயநகர் போலீசார் ஆஷிஷ் எண்ணெய் மற்றும் கஞ்சாவை விற்று வந்த நயாஜ் பாஷா , சாகர்தாஹு , மற்றும் சேஷகிரி உட்பட மூன்று பேரை கைது செய்து இவர்களிடமிருந்து ரூபாய் இருபது லட்சங்கள் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சா மற்றும் 2.80 லட்சரூபாய் மதிப்புள்ள ஆறு கிலோ ஆஷிஷ் எண்ணெய்யை கைப்பற்றியுள்ளதாக போலீஸ் ஆணையர் தெரிவித்தார். கஞ்சா விவகாரத்தில் முன்னர் கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளி நயாஸ் பாஷா அளித்த தகவல்களை வைத்து ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்திற்கு சென்ற ஜெயநகர் மஞ்சுநாத் தலைமையிலான குழுவினர் அங்கு மேலும் இரண்டு பேரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தெற்கு பிரிவு டி சி பி கிருஷ்ணகாந்த் தலைமையில் ஜெயநகர் மற்றும் கெம்பேகௌடா நகர் போலீசார் தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு பெரிய அளவிலான போதை பொருள்களை கைப்பற்றுவதில் வெற்றியடைந்துள்ளனர். என்றும் நகர போலீஸ் ஆணையர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார். நகர போலீஸ் ஆணையரின் இந்த பேட்டியின் போது கூடுதல் போலீஸ் ஆணையர் சந்தீப் பாட்டில் மற்றும் டி சி பி கிருஷ்ணகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.