ரூ.50 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

சென்னை: மார்ச் 9: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்து வரும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களுக்கும் தங்கம் வாங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை அதிகரிப்போ, குறைவோ மக்களை நேரடியாக பாதிக்க கூடிய ஒன்றாக இருக்கும். தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஐ.6,150க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.79.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய முன்தினம் முதல் முறையாக ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தைக் கடந்தது. அதேபோல ஒரு சவரனுக்கு ரூ.48,000 கடந்தது.
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசு 14.3 ஆக உயர்த்தியிருந்தது. அமெரிக்காவில் பண வீக்கம் கட்டுக்குள் இருப்பது. அந்நாட்டில் வட்டி வீதம் குறைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. தங்கம் விலை இனி குறைய வாய்ப்பு இல்லை.. மேலும் உயரவே வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு பவுன் தங்கம் விரைவில் 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் நிபுணர்கள் கூறினர்.