ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்; திருமண பெண் வீட்டாருக்கு 10 கிராம் தங்கம்

ஹைதராபாத்: அக் 18-
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திருமணத்தின் போது மணமகளுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டரும் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.தெலங்கானா மாநில சட்டப் பேரவை தேர்தல் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 119 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கு பிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி, தெலுங்கு தேசம், ஓவைசியின் கட்சி, கம்யூனிஸ்ட் மற்றும் ஜனசேனா கட்சி போட்டியிடுகின்றன.
இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கூட்டணி வைத்துள்ளன. பி ஆர் எஸ் கட்சியுடன் ஓவைசியின் கட்சி ரகசிய கூட்டணி வைத்துள்ளதால், அக்கட்சி போட்டியிடும் இடங்களில் பிஆர்எஸ் போட்டியிடாது. காங்கிரஸ், பாஜக, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி ஆகியவை தனித்தே போட்டியிடுகின்றன.
இந்நிலையில், முதியோர், விதவைகள் ஆகியோருக்கு மாதம் ரூ.5,016ம், சமையல் காஸ் சிலிண்டர் ரூ.400க்கும், பெண்களுக்கு மாத உதவி தொகை ரூ.3,000 வழங்கப்படும் என சந்திரசேகர ராவ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், திருமணம் செய்யும் மணப்பெண்ணுக்கு 10 கிராம் தங்கமும், ஏழைகளுக்கு ரூ.500 சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் மாதம் ரூ.2,500 உதவி தொகை வழங்குவது எனவும் காங்கிரஸ் தீர்மானம் செய்துள்ளது. விரைவில் தெலங்கானா காங்கிரஸ் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ம.பி.யில் ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடுமத்திய பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் 106 பக்க தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், விவசாயிகள், பெண்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கும் பயனளிக்கும் வகையிலான 59 வாக்குறுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, ரூ.25 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு, ஓபிசி சமூகத்துக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்துக்கென பிரத்யேகமான ஐபிஎல் அணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியையும் காங்கிரஸ் அளித்துள்ளது. இவைதவிர, ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதந் தோறும் ரூ.1,500 உதவித் தொகை, ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பள்ளிக் கல்வி இலவசம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் வாரி வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப் பில்லா தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இளைஞர்களின் வாட்டத்தை போக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.