ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம்

தூத்துக்குடி/ திருநெல்வேலி: டிச.21-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வை தொடங்கினர். ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சேதாரம் ஏற்பட்டிருப்பதாக தமிழகவருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
குமரிக்கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு முதல் 18-ம் தேதி பகல் வரை இடைவிடாத மழை பெய்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
28 பேர் உயிரிழப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் மூழ்கி 16 பேர்,சுவர் இடிந்து விழுந்து 2 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 304 குடிசைகள் பகுதியாகவும், 206 குடிசைகள் முழுமையாகவும், 6 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் வடியாத நிலையில் சேத மதிப்பு முழுமையாக தெரியவரவில்லை. 4 மாவட்டங்களிலும் 85 ஆயிரம் ஹெக்டேரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.