ரூ.5,000 கோடி முதலீடு

மும்பை: மார்ச் 29: கிரிக்கெட் வீரர் சச்சின் முதலீடு செய்துள்ள ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ரூ.5,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
வாகனங்கள் முதல் ஸ்மார்ட்போன் வரையில் செமிகண்டக்டர் பயன்பாடு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் தற்போது உலக நாடுகள் செமிகண்டக்டர் தயாரிப்பு சார்ந்து தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இந்தியா, தனக்குத் தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்துவரும் நிலையில், தற்போது, அவற்றை உள்நாட்டில் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனம், குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ரூ.6,650 கோடி முதலீட்டை அறிவித்தது. தற்போது டாடா குழுமம், சிஜி பவர் ஆகிய நிறுவனங்கள் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க உள்ளன.
இந்தச் சூழலில் ஆர்ஆர்பி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் செமிகண்டக்டர் கட்டமைப்பு உருவாக்கத்துக்கு ரூ.5,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது.
இந்த முதலீடு தொடர்பாக அந்நிறுவனம், “செமிகண்டக்டர் துறை சார்ந்த எங்களது செயல்பாட்டைவிரிவாக்க முடிவு செய்துள்ளோம்.இதன் ஒரு பகுதியாக அடுத்த 5ஆண்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடிமுதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.