ரூ.5,000 பணம் தராததால் தாயைக் கொன்ற மகன்

பிரயாக்ராஜ்,டிச.16-
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிமான்ஷு (20 வயது). அவரது தாய் பிரதிமா தேவி (43 வயது). இவர்கள் அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது தாயை கொன்ற ஹிமான்ஷு”, அவரது சடலத்தை ஒரு சூட்கேசில் வைத்து பிரயாக்ராஜுக்கு ரெயிலில் வந்துள்ளார். அங்கு திரிவேணி சங்கமத்தில் உடலை வீச முடிவு செய்து வந்துள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஹிமான்ஷு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து சூட்கேசை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில், கடந்த 13-ந்தேதி ஹிமான்ஷு, அவரது தாயிடம் ரூ.5 ஆயிரம் கேட்டதாகவும் பணம் தர அவரது தாய் மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொன்றதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.