ரூ.6,000 – தமிழக அரசு விளக்கம்

சென்னை: ஜனவரி. 7 – வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரும் வழக்கு விசாரணையின் போது ரொக்கமாக வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தொகையை நியாய விலைக் கடைகளின் மூலமாக ரொக்கமாக வழங்க தடை கோரியும், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக் கோரியும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராமதாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோல இந்த நிவாரண நிதியை அதிகரித்து வழங்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவரான செல்வக் குமார் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கும் ரூ.6 ஆயிரத்தை உடனடி நிவாரணமாக ரொக்கமாக வழங்கலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டு இருந்தனர்.இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு பதிலளித்து தமிழக அரசு தரப்பில் மாநில அரசு பிளீடர் பி.முத்துக் குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது: சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா ரூ.6ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.31.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 லட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.